உள்ளாட்சி தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால்...... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

திங்கள், 3 ஏப்ரல் 2017 (16:51 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பிக்கு ஆளாக நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.



 

 
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதில், சரியாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்போது தேர்தலை ரத்து செய்து உத்த்ரவிட்டது. மேலும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இந்த தீர்ப்பு எதிராக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. பின் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டது.
 
பள்ளி மாணவர்கள் தேர்வு நேரம் என்பதால் பூத் அமைப்பதில் சிக்கல் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. 
 
மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியது இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை மறுக்கப்பட்டது. தமிழகத்தில் மே மாதம் 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்