தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானதும், மிகவும் வருத்தத்துக்குரியதும் ஆகும் எனக் கூறியுள்ளார்.
தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி என்றும் வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி வாக்குறுதியளித்துள்ள சமூக - பொருளாதார மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும் என்றும் அதற்குத் தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.