தமிழகத்தில் நல்ல சாராயம் (??!!) கள்ளச்சந்தையில் தடையின்றி விற்கப்படுகிறது. படிப்படியாக மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கமே இதனால் சிதைந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுக ஆட்சியில் அறிவிப்புகள் அனைத்தும் ஏட்டிலும், எழுத்திலும் மட்டும் தான் இருக்கும்... செயல்பாட்டில் இருக்காது. இதற்கு கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் வெளியிடப்பட்ட மது விற்பனை நேரம் குறைப்பு மற்றும் 500 மதுக்கடை மூடல் குறித்த அறிவிப்பும் உண்மையாக நடைமுறைக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் மது போதையின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்ட நிலையில், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்க முடியும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக உறுதியாக உள்ளது. அதனால் தான் பாமக ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் கையெழுத்திடும் முதல் உத்தரவே தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்தார். அத்துடன் பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றார். பின்னர், முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, தமிழகத்தில் மதுக்கடைகள் காலை 10.00 மணிக்கு பதிலாக நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும் & மொத்தம் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அந்த உத்தரவை செயல்படுத்துவதில் தான் ஆயிரமாயிரம் குழப்பங்கள்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி நண்பகல் 12.00 மணிக்கு தான் அதிகாரப்பூர்வமாக மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என்ற போதிலும், மதுக்கடைகளுக்கு அருகிலுள்ள குடிப்பகங்களிலும், மறைவான இடங்களிலும் அதிகாலை 6.00 மணியிலிருந்தே மது விற்பனை செய்யப்படுகிறது. மது மற்றும் பீர் வகைகளின் அதிகபட்ச விலையை விட ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் மதுக்கடைகளின் கதவு சிறிதளவு மட்டும் திறக்கப்பட்டு சட்டத்திற்கு விரோதமாக மது விற்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 6803 மதுக்கடைகளும், 3877 குடிப்பகங்களும் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படும் போதிலும், அனைத்து மதுக்கடைகளுடனும் குடிப்பகங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. 3877 குடிப்பகங்கள் சட்டபூர்வமானவை என்றால் 2926 குடிப்பகங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன என்று பொருள். அனைத்து வகை குடிப்பகங்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் நேரடி கட்டுப்பாட்டில் தான் உள்ளன என்பதால் அவற்றில் எந்நேரமும் மது விற்கப்படுகிறது. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இதற்கு துணை போவது இன்னும் கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் பா.ம.க. வலியுறுத்திய போதெல்லாம், மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று கூறி மதுவிலக்கு கோரிக்கையை அதிமுக, திமுக அரசுகள் ஏற்க மறுத்து வந்தன. ஆனால், இப்போது படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி விற்பனை நேரத்தை தமிழக அரசு குறைத்த நிலையில், குறைக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்திற்கு அதிமுகவினர் குடிப்பகங்களில் மதுவை விற்பனை செய்கின்றனர்.
சுருக்கமாகக் கூறினால், தமிழகத்தில் நல்ல சாராயம் (??!!) கள்ளச்சந்தையில் தடையின்றி விற்கப்படுகிறது. படிப்படியாக மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கமே இதனால் சிதைந்து விட்டது.
அதேபோல், தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து 20 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்தக் கடைகள் எப்போது மூடப்படும் என்பது பற்றிய அறிவிப்பைக் கூட அரசால் இன்னும் வெளியிட முடியவில்லை.
உண்மையில் ஜெயலலிதாவின் நோக்கம் என்னவெனில், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பைக் காட்டி உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பது தான். உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் புதிதாக மதுக்கடைகளை திறப்பாரே தவிர, ஏற்கனவே உள்ள மதுக்கடைகளில் ஒன்றைக்கூட மூட மாட்டார் என்பது தான் உண்மை. படிப்படியாக மதுவிலக்கு என்பது நாடகம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
2015 ஆண்டில் நிகழ்ந்த சாலைவிபத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த ஆண்டும் சாலை விபத்துக்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 2002-03 ஆண்டில் மதுக்கடை அரசுடைமையாக்கப்பட்டது முதல் இன்று வரை கடந்த 13 ஆண்டுகளாக சாலை விபத்துக்களில் தமிழகம் தான் முதலிடம் என்பதிலிருந்தே மதுவுக்கும், விபத்துக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம். இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் தமிழகத்திற்கு தேடித்தந்தது இத்தகைய அவப்பெயர்கள் தான். அனைத்து சிக்கல்களுக்கு ஒரே தீர்வு முழு மதுவிலக்கு மட்டுமே.
மக்கள் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்குள் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்து அதை செயல்படுத்துவதற்கான அட்டவணையை ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.