அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளிவைப்பு!

வியாழன், 16 ஜூன் 2022 (12:56 IST)
ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அதிமுகவின் பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளிவைப்பு. 

 
ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அதிமுகவின் பொதுக் குழுவுக்குத் தடை கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு இன்று நீதிபதி ப்ரியா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் - இபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்றும் அவர் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும்" என்றும் கோரப்பட்டிருந்தது.
 
இதற்குப் பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அ.தி.மு.கவின் பொதுக் குழு ஜூன் 23 ஆம் தேதி கூடவிருப்பதால், அதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. 
 
ஆனால், நீதிபதி அதனை ஏற்கவில்லை. உரிமை இயல் வழக்குகளில் இந்த அளவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கூறி, வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை உறுதி செய்தார் நீதிபதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்