ஆர்கே நகர் மக்கள் திருந்தாத ஜென்மம்: கங்கை அமரன் சாடல்!

வியாழன், 6 ஏப்ரல் 2017 (14:45 IST)
ஆர்கே நகர் தேர்தலில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மற்ற கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதையும், ஆர்கே நகர் மக்கள் அதனை பெறுவதையும் கடுமையாக சாடியுள்ளார்.


 
 
தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் மிஞ்சும் வகையில் ஆர்கே நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் 4000 வரை அளிக்கப்படுகிறதாம்.
 
அதுமட்டுமில்லாமல் பரிசு பொருட்கள், மளிகை கடை பில் என புது புது வியூகங்களை கையாண்டு வாக்காளர்களை கவருவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றது. இதில் அதிகபட்சமாக அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தரப்பு மீது தான் புகார்கள் வருகின்றன.
 
மற்ற கட்சிகளும் அவருக்கு போட்டிப்போட்டு பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் நேற்று வாக்கு சேகரிக்க சென்ற பாஜக வேட்பாளர் கங்கை அமரன் இது குறித்து பேசினார்.
 
மற்ற கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி தகவல்களை புள்ளி விபரங்களுடன் கூறிய அவர், திருந்தாத ஜென்மங்கள் இந்த வாக்காளர்கள். யார் பணம் கொடுப்பார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார்.
 
வாக்காளர்களை பார்த்து திருந்தாத ஜென்மம் என அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது அவருக்கு ஓட்டாக மாறுமா?, எதிர்வினையாற்றுமா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்