தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: 1,000 இடங்களில் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Mahendran

புதன், 9 அக்டோபர் 2024 (12:03 IST)
சென்னை கிண்டி, அரிமா சங்க லேபர் காலனி பகுதியில், அரிமா சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து இலவச இதய மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த முகாமை தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதேபோல், டெங்குவால் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன. இந்த ஆண்டின் இதுவரை, டெங்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

மழைக்காலம் முந்தி வரும் நிலையில், மக்கள் சுத்தமான மற்றும் காய்ச்சிய நீரை மட்டும் குடிக்க வேண்டியது அவசியம். வீடுகளுக்கு அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்; அதில் சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம்கள் நடைபெறும். இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற முகாமும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்டது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்