லட்சக்கணக்கான மாணவர்கள் ; ரூ.600 கோடி வரை கலெக்‌ஷன் : நடந்தது என்ன?

சனி, 4 ஆகஸ்ட் 2018 (10:44 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பேராசிரியர் உமா தரப்பு பல கோடி சுருட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கடந்த 2017ம் ஆண்டு தேர்வு எழுதிய போது அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. 
 
அதாவது, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும், தற்போதையை ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற  50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அதில், முறைகேடு நடைபெற்றது உறுதியானது.  
 
அதைத்தொடர்ந்து முன்னாள் தேர்வுகட்டுப்பாட்டாளர் உமா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் உமா எப்படி மோசடி செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2015ம் ஆண்டு தேர்வு கட்டுப்பாடு அலுவலர் பதவிக்கு வந்தவர்தான் உமா. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளின் விடைத்தாள்களை எந்த பேராசிரியர் திருத்த வேண்டும் என்பது முடிவெடுக்கும் அதிகாரம் உமாவிற்கு மட்டுமே உண்டு. 

 
எனவே, சில பேராசியர்களை தன் பக்கம் வளைத்த உமா, நன்றாக தேர்வு எழுதியிருந்தாலும் குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு குறைந்த மதிப்பெண்களை போட சொல்வாராம். பலரை பெயில் ஆக்கவும் சொல்வராம். பேராசிரியர்களும் அதை செய்ய, நாம் நன்றாகத்தானே தேர்வு எழுதினோம். எப்படி இவ்வளவு குறைவாக மதிப்பெண் வந்தது எனக்கருதி மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். 
 
அதன்பின், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சிலர் மூலமாக அந்த மாணவர்களிடம் பேரம் பேசப்பட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 ஆயிரம் வசூல் செய்து அதிக மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்களிடம் இப்படி வசூல் செய்ததில் ரூ.600 கோடி வரை பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. இதில், 60 சதவீதம் உமாவிற்கும், 40 சதவீதம் பேப்பர் திருத்தும் பேராசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
 
எப்படியாவது துணை வேந்தர் ஆக வேண்டும் என கருதிய உமா, அதற்கு லஞ்சமாக கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கலாம என பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்  மற்ற பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த விவகாரத்தில் விஜயக்குமார், சிவக்குமார் என இருவர்தான் உமாவுடன் அதிக தொடர்பில் இருந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
உமாவின் இந்த செயலால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளின் படிக்கும் மாணவர்களின் தரமே கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்