எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து சென்றவர் இன்று எம்.ஜி.ஆர் கழக கொடியினை புறக்கணிக்கின்றாரா ?

வெள்ளி, 29 மார்ச் 2019 (13:29 IST)
தமிழக அளவில் காங்கிரஸ் கட்சி என்றாலே உள்கட்சி பூசலின் கூடாரம் என்று தான் கூறவேண்டும் இன்று அந்த காங்கிரஸ் கட்சியின் கரூர் கூட்டணியில் மிகுந்த குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் இத்தனை ஆண்டு காலம் முழுக்க, முழுக்க, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த எம்.ஜி.ஆர் கழகம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் படத்தையும், எம்.ஜி.ஆர் படத்தினையும் புறக்கணித்ததோடு, எம்.ஜி.ஆர் கழகத்தினரையும் அழைக்காததினால் இந்த மக்களவை தொகுதி தேர்தலில் கரூர் மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் கூட்டணியினருக்கு வேலைபார்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.பெரியசாமி இன்று திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



மேலும், செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.பெரியசாமி, இன்றுவரை எங்களது கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் என்றும் அதன்பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் மிகுந்த நெருக்கமாக இருந்த நிலையில், தற்போது கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து (அ.தி.மு.க) வந்து, இன்று தி.மு.க விற்கு வந்து பின்னர் எம்.ஜி.ஆர் கொடி பிடிக்காதது போல நினைக்கின்றார். ஆகவே, காங்கிரஸ் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்புமனு தாக்கலில் எம்.ஜி.ஆர் கழகத்தினரையும் புறக்கணித்ததோடு, எம்.ஜி.ஆர் கழக நிறுவனரின் புகைப்படத்தினையும் விட்டு விட்டுள்ளனர். ஆகவே, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும், தி.மு.க மாவட்ட பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு பலத்த கண்டனம் தெரிவித்ததோடு, இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்ய மாட்டோம் என்று உறுதி பட தெரிவித்து விட்டார்.

மேலும் வரும் வியாழன் அன்று கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற நிர்வாகிகள் மற்றும் அந்த 6 சட்டமன்றத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களான கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து யோசனை கூட்டம் நடத்தி தக்க பதிலடி கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்