ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஐடி ஊழியர்கள் “திறமையற்ற மற்றும் தங்களை மேம்படுத்தி கொள்ளாத ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் வெளியேற்றுவது வாடிக்கைதான். ஆனால் அதற்கென ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் சில சட்டத்திட்டங்கள் வைத்துள்ளன். சில ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்படும் நபருக்கு மூன்று மாதங்கள் முன்பே தகவல் தெரிவித்து விடுவர். பணியை விட்டு போகும்போது மூன்று மாத சம்பளத்தை கூடுதலாக அளிப்பர். ஆனால் எல்லா ஐடி நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றுவதில்லை. சில நிறுவனங்கள் காலையில் பணிக்கு செல்லும்போதுதான் பணிநீக்கம் செய்யப்பட்டதையே சொல்லி திரும்ப அனுப்புவார்கள்” என தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட இதே ரீதியான தகவல்களையே ஐடி நிறுவனங்களின் கண்ணோட்டத்தில் கூறியுள்ளார் முன்னாள் ஐடி நிறுவன தலைமை அதிகாரி ஒருவர். ஐடி நிறுவனத்தை பொறுத்தவரை ஊழியர்கள் தங்களை மேம்படுத்தி கொள்வது மிக முக்கியம். நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மேம்பாடு அடையாத ஊழியர்கள் மட்டுமே கணக்கிடப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒரு நிறுவனத்தில் செலவுகள் அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க அந்தந்த நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.