கோமியம் பற்றி நான் சொன்னது அனைத்தும் உண்மை.. ஆதாரம் இருக்கு! - ஐஐடி இயக்குனர் காமகோடி!

Prasanth Karthick

செவ்வாய், 21 ஜனவரி 2025 (11:49 IST)

சமீபத்தில் கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தான் சொன்னது அனைத்தும் உண்மையே அன அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

சென்னை மாம்பலம் பகுதியில் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்ற கோ பூஜையில் கலந்து கொண்ட சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, பசுங்கோமியத்தில் வைரஸ், பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உள்ளதாகவும், ஒரு சன்னியாசி பரிந்துரையின் பேரில் தனது தந்தையார் கோமியம் குடித்து காய்ச்சல் குணமானதாகவும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

ஐஐடி போன்ற ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குனராக இருந்து கொண்டு அறிவியலுக்கு புறம்பாக ஆதாரமின்றி பேசுவது முறையற்றது என காமகோடிக்கு அரசியல் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்,

 

ஆனால் தான் கூறியது அனைத்தும் உண்மை என்று அதற்கு பதில் அளித்துள்ளார் காமகோடி. செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல்வாதிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. ஆனால் இது முற்றிலும் அறிவியல் பூர்வமானது. சில பண்டிகைகள் சமயத்தில் நானும் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டுள்ளேன். பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 

 

அமெரிக்காவின் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட 5 ஆய்வுக் கட்டுரைகள் இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புவேன்” என பேசியுள்ளார்.

 

ஆனால் அவரது கருத்துக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. பசு, எருமைகளின் சிறுநீரை ஆய்வு செய்ததில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் அதில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

Edit by Prasanth.k

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்