ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து அந்த தொகுதியில் மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தவிர அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தன. நாம் தமிழர் கட்சி மட்டும் திமுகவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் விரும்பினார். ஆனால் அதிமுக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து விட்டதால் அவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக செந்தில் முருகனை அதிமுக கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார் செந்தில் முருகன். தான் சுயேட்சையாக போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விரக்தியில் இருந்த செந்தில் முருகன் இன்று திமுக அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஒரு வாரத்திற்குள் அதிமுக, சுயேட்சை, திமுக என செந்தில் முருகனின் பயணம் அமைந்துள்ளது. இது ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K