ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவரின் தியாகங்களைப் பாராட்டி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தது எம்.ஜி.ஆர்., என்றும், தங்க கவசம் வழங்கியது ஜெயலலிதா என்றும், அ.தி.மு.க.வின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், முத்துராமலிங்கத் தேவர் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்றும், ஏழை மக்களுக்கு சொந்த நிலங்களை வழங்கியவர் என்றும் குறிப்பிட்டார்.
அவரது தேச சேவைக்காக, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் ஈபிஎஸ் வலியுறுத்தினார். தேச தலைவரின் புகழை போற்றும் இந்த கோரிக்கையை அவர் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.