எடப்பாடியுடன் கை கோர்க்கும் ஓ.பி.எஸ்? - தினகரனுக்கு செக்..

புதன், 5 ஜூலை 2017 (15:16 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் விரைவில் ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


 

 
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி எனவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.  முதல்வர் பதவி, அமைச்சர் பதவி,  தினகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இரு அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லாமல் போனது.  
 
மேலும், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் இணைவது முக்கியம் என கருதிய தினகரன், தான் கட்சி பணிகளிலிருந்து விலகி விட்டதாக தெரிவித்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியே வந்த தினகரன், இரு அணிகளும் மீண்டும் இணையவில்லை. எனவே நான் கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவேன் என தெரிவித்து எடப்பாடி அணிக்கும், ஓ.பி.எஸ் அணிக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அவரை பெங்களூருக்கு அழைத்த சசிகலா 2 மாதம் பொறுமையா இருக்குமாறு கூறினார்.
 
தினகரனை சந்திப்பதை எடப்பாடி தவிர்த்து வருகிறார். சசிகலா குடும்பத்தை அரவணைத்து சென்றால் பாஜகவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதை நன்கு உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, எந்த இடத்திலும் சசிகலா மற்றும் தினகரனின் பெயரை கூறவே இல்லை. இது தினகரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் என் நடவடிக்கையை பாருங்கள் என அதிரடி காட்டினார் தினகரன்.


 

 
35 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்ட நினைக்கிறார் தினகரன் என்பதை புரிந்து கொண்ட எடப்பாடி, தினகரனை காலி செய்ய ஓ.பி.எஸ் அணியோடு இணைவதே சரி எனும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இரு அணிகளும் இணையாமல் இப்படியே தொடர்வது, தினகரனுக்கு சாதகமாக அமையும் என்பதை புரிந்த ஓ.பி.எஸ் அணியும், முதல்வர் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.
 
இரு அணிகளும் இணைந்துவிட்டால் அதற்கு பின் தினகரனின் பலம் குறையும். மேலும், இவர்களுக்கு எதிராக அவரால் செயல்பட முடியாமல் போகும். எனவே, அவர் விதித்த கெடுவான ஆகஸ்டு 8ம் தேதிக்கு முன்பே இரு அணிகளும் இணைந்து விடும் எனத் தெரிகிறது. 
 
முக்கியமாக, சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி  அணிகள் இறங்கியுள்ளது. ஆட்சிக்கு எடப்பாடியும், கட்சிக்கு ஓ.பி.எஸ்-ஸும் தலைமையேற்கலாம். அதாவது, ஓ.பி.எஸ்-ஸிற்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்படலாம். அதேபோல், ஓ.பி.எஸ் அணியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவிகளும் அளிக்கப்படலாம். அதிமுகவின் சட்ட விதிகளும் மாற்றியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 
எப்படி பார்த்தாலும், இரு அணிகளின் இணைப்பு தினகரனுக்கு பாதகமாகவே முடியும். இதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார், அதன் பின் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதில்தான் அவரின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்