ஓரங்கட்டும் எடப்பாடி - அப்செட்டில் ஓ.பி.எஸ்?

ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (11:29 IST)
கட்சி வட்டாரத்திலும், அதிகாரிகள் வட்டாரத்தில் தனக்கு உரிய மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொடுக்காமல் இருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பி.எஸ், துணை முதலமைச்சர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு எடப்பாடி அணியுடன் இணைந்தார். ஆனால், அது நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர்களின் இணைப்புக்குள் இருக்கும் கசப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது, அவருக்காக உழைத்தவர்கள் பலர். அப்போது அவர் நடத்திய கூட்டங்களுக்கு செலவழித்தவர்கள் பலர். ஆனால், கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், அவர்கள் யாருக்கும் சரியான பதவியை ஓ.பி.எஸ்-ஸால் பெற்றுத்தரமுடியவில்லை எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் அவர்கள் ஓ.பி.எஸ்-ஸிடம் நேரில் சென்றே சமீபத்தில் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 
 
கட்சியில் இப்படி எனில், ஆட்சி தரப்பிலும் எடப்பாடி தரப்பு அவரை ஓரங்கட்டுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் பழனிச்சாமியைத்தான் சந்தித்து பேசுகின்றனர். அதேபோல், அதிகாரிகள் வட்டத்திலும், ஓ.பி.எஸ்-ஸிற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அதனால்தான், இரு அணிகள் இணைந்த பின்பும், ஓ.பி.எஸ் பற்றிய செய்திகளோ அல்லது புகைப்படமோ கூட பெரிதாக எதுவும் செய்தித்தாள்களில் வெளியாவதில்லை. அதேபோல், கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்களின் போது வைக்கப்படும் பேனரில் கூட ஓ.பி.எஸ் புகைப்படங்கள் இல்லை. 
 
இந்த விவகாரம், ஓ.பி.எஸ்-ற்கு மட்டுமில்லாமல் அவர் பின்னால் சென்ற மைத்ரேயன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்