டெல்லியில் எடப்பாடி அணியினர் - இரட்டை இலை கிடைக்குமா?

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (13:13 IST)
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர்.


 

 
ஓ.பி.எஸ் தலைமையில் தனி அணி உருவானதால் அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. அதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதேபோல், அதிமுக என்ற பெயரையே பயன்படுத்தக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
 
அந்நிலையில், ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணியுடன் சமீபத்தில் இணைந்தது. எனவே, இரு அணி, ஒரு அணியாக மாறியது. ஆனால், தினகரன் தலைமையில் தனி அணி உருவாகியுள்ளது. அதன் பின் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா பதவி நீக்கம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எம்.பி.மைத்ரேயன், கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், பொதுக்குழு தீர்மானங்களை அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். எம்.பிக்கள், எம்.ல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றாக இணைந்துவிட்டனர். அணிகள் இணைப்பை பொதுக்குழு அங்கிகரித்து விட்டதால், அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கடிதமும் தரப்பட்டுள்ளது. 
 
ஆனால், இரட்டை இலை விவகாரத்தில் எங்களை கேட்காமல் முடிவு செய்யக்கூடாது என தினகரன் தரப்பில் ஏற்கனவே ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே, எடப்பாடி அணிக்கு இரட்டை இலை கிடைக்குமா, இல்லையா என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவில் இருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்