ஓபிஎஸ் பக்கம் சாயும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்? – பெரியகுளம் பண்ணை வீட்டில் சந்திப்பு!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:55 IST)
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக ஈபிஎஸ் அறிவித்த நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.

தற்போது அதிமுக தலைமை செயலகத்தின் சாவியும் ஈபிஎஸ் கைக்கு சென்றுவிட்ட நிலையில், மீண்டும் கட்சியை கைப்பற்றுவது குறித்து தனது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து பலர் ஓபிஎஸ்சை சென்று அவரது பெரியகுளம் பண்ணை வீட்டில் சந்தித்துள்ளனர். சேலம் மாநகர அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி மற்றும் பலர் பெரியகுளம் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் “ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம். தங்களுக்கு வேண்டியயவர்களை மட்டும் கட்சியில் பதவிகளை கொடுத்துவிட்டு மற்றவர்களை நீக்கி வருகின்றனர்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்