சொத்துக்குவிப்பு வழக்கு ; உச்சநீதிமன்ற தீர்ப்பு : மௌனம் காக்கும் எடப்பாடி அரசு

சனி, 10 மார்ச் 2018 (15:52 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார்.
 
ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி ஜெ. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். அதன் பின், கர்நாடக அரசின் மேல் முறையீட்டின் காரணமாக, குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அந்த தீர்ப்பால் சசிகலா, இளவரசி, தினகரன் என அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
அதேபோல், குன்ஹாவின் தீர்ப்பின் படி வழக்குக்கு சம்பந்தப்பட ஜெ. உள்ளிட்டோரின் சொத்துகளை ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்கம் (விஜிலென்ஸ்) கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதாவது, அந்த சொத்துக்களை கைப்பற்றி அரசின் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் குன்ஹா தீர்ப்பின் சாராம்சம்.
 
ஆனால், தீர்ப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும், தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெ.வின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்தால் அது அதிமுக கட்சிக்கும், அவரின் பெயரை சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தை எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு கிடப்பில் போட்டிருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்