அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவிய நிலையில் அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பொதுக்குழுவின் முடிவை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட்டு வருகிறார்.
கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தின்போது துணை எதிர்கட்சி தலைவர் என்ற பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டதாக சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனாலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்தார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டிஸிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் குறிப்பிடப்பட்டதால் அந்த கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியது.