அதிமுக முக்கிய தலைவரான ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில தினங்களாக அதிமுக ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டு வந்தார். இதனால் இப்போது யார் அதிமுகவில் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்பதே குழப்பமானதாக உள்ளது.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என்றும், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில் ஓபிஎஸ் விரைவில் குணமாக வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவரது ட்வீட்டில் ஓபிஎஸ் அவர்களை “முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்” எனக் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு விட்டதாக ஈபிஎஸ் அறிவித்த நிலையில் அண்ணாமலையின் இந்த வார்த்தைப் பிரயோகம் கவனம் பெற்றுள்ளது.