குற்றம் சுமத்தினாலே குற்றவாளி அல்ல : விஜயபாஸ்கர் குறித்து பழனிச்சாமி பேட்டி

செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:35 IST)
குட்கா விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.  
 
இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   
 
இந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், நான் ராஜினாமா செய்ய முடியாது என முதல்வரிடம் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறிவிட்டதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குட்கா விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். குற்றத்தை நிரூபிக்க வேண்டும்’ என தெரிவித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் வீட்டில் ஆதாரம் சிக்கியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு “பணம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்