குட்கா விவகாரம் ; சசிகலாவை குறி வைக்கும் சிபிஐ : நடப்பது என்ன?

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (12:33 IST)
சிறையில் உள்ள சசிகலா மீது புதிய வழக்கை பதிவு செய்யவே சிபிஐ தரப்பு குட்கா விவகாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.  நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  5 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டனர்.
 
எனவே, விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், குட்கா தொடர்பாக பெறப்பட்ட லஞ்சப்பணம் சசிகலா தரப்பு சென்றதாக கருதும் சிபிஐ தரப்பு அவரை சிக்க வைக்கவே சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 
அதாவது, 2016ம் ஆண்டும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில்தான் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்கள் தொடங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கும் எவ்வளவு லஞ்சப்பணம் அளிக்கப்பட்டது என்கிற தகவல் கிடைத்தது. இதுதான் குட்கா விவகாரத்தின் தொடக்கம். 
 
எனவே, அவர்கள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை அப்போதைய டிஜிபி அசோக்குமாருக்கு கடிதம் அனுப்பியது. எனவே, இது தொடர்பாக அசோக்குமார் உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து முதல்வர் ஜெ.விற்கு உள்துறை செயலாளர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
 
ஆனால், யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நிர்பந்தம் காரணமாக அசோக்குமாரும் பதவி விலகினார். ஜெ.வின் மறைவிற்கு பின் போயஸ்கார்டனில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஜெ.விற்கு உள்துறை செயலாளர் அனுப்பிய கடிதமும், அசோக்குமாரின் கடிதம் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது. அதை சசிகலாதான் எழுதியிருக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் கருதுகிறார்கள்.
 
எனவே, லஞ்சப்பணம் கார்டன் வரை சென்றிருக்க வேண்டும் என கணக்கு போடும் சிபிஐ தற்போது அதிரடி சோதனை மூலம், சசிகலாவிற்கு லஞ்சப் பணம் சென்றதை விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஒத்துக்கொண்டு வாக்குமூலம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களாம். இதன் மூலம், சசிகலா மீது புதிய வழக்கை பதிவு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
 
அதோடு, இதை செய்துவிட்டால் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்