சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனது எப்படி? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (16:25 IST)
அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக செயற்குழு கூடி ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலாவை புதிய பொதுச்செயலாளராக நியமித்தது. இதற்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. தான் அதிமுக பொதுச்செயலாளர் ஆகியிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் சசிகலா கடிதம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், வி.கே.சசிகலாவின் இந்த கடிதத்தை ஏற்கக் கூடாது என்று, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சசிகலா புஷ்பாவும் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து வி.கே. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யவில்லை; எனவே, சசிகலாவின் நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது; தேர்தல் ஆணையமே அதிமுக பொதுச்செயலாளர் பதவித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, வி.கே. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்