ஆர்.கே.நகர் முழுவதும் சிசிடிவி கேமரா - தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (10:51 IST)
நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 

 
வருகிற ஏப்ரல் 12ம் தேதி, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தினகரன், மதுசூதனன், தீபா  மற்றும் திமுக, பாஜக அகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அங்கு போட்டியிடுவதால், பணத்தை கொடுத்து வாக்குகளை பெறும் முயற்சியில்  அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து, தமிழக துணைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா, முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஆர்.கே.நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் 256 வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். 
 
வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்படும். அதேபோல், தேர்தல் முடியும் வரை, இரண்டு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
 
முக்கியமாக, வேட்பாளர்களின் செலவீனங்களைக் கண்கணிக்க, 5 வருவாய்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்