மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (09:06 IST)
கடந்த 18-ஆம் தேதி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 
ஆனால் சபாநாயகர் தனபால் அதனை ஏற்காததால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.
 
இதனையடுத்து சென்னை மெரினாவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி பின்னர் கைவிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் இன்று திமுக சார்பாக சட்டசபையில் அந்த கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் போராட்டம் தொடங்கியுள்ளது.
 
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்