பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்க திமுக தான் காரணம்: எப்படி தெரியுமா?

திங்கள், 26 ஜூன் 2017 (11:58 IST)
இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
இதற்காக பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை அறிவித்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.
 
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்குவகிக்க இருக்கும் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அதிமுக பாஜகவுக்கு தனது ஆதரவை அளித்தது. அதிமுக மூன்று அணியாக இருந்தாலும் ஒவ்வொரு அணியும் ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் ஆதரவை பாஜகவுக்கு அறிவித்தது.
 
ஏற்கனவே பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது எனவும், பாஜகவின் பினாமி கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ள ஒருவரை பாஜக வேட்பாளரை நிறுத்தியும் அதனை அதிமுக ஆதரித்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
ஒவ்வொரு கட்சியும் பல்வேறு கொள்கைகள், அரசியல் சூழல்கள், வேட்பாளரின் தன்மைகள் குறித்து முடிவெடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆனால் அதிமுக அற்பமான அரசியல் காரணத்தை பாஜகவுக்கு ஆதரவு அளித்ததற்கு காரணமாக கூறியுள்ளது.
 
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக அடித்துக்கொள்ளும் கட்சி தான். திமுக ஒரு நிலைப்பாடு எடுத்தால், அதிமுக அதற்கு எதிர்மறையான நிலைப்பாடை எடுக்கும். ஆனால் இதனை ஜனாதிபதி தேர்தலில் அதிமுக பின்பற்றியுள்ளது.
 
பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்த அதிமுக எம்எல்ஏ வேற்றிவேல் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் போது நாங்கள் பாஜக வேட்பாளரைதான் ஆதரிக்க முடியும் என்றார். இப்ப புரிகிறதா அதிமுக பாஜக வேட்பாளரை ஆதரிக்க திமுக தான் காரணம் என்று.

வெப்துனியாவைப் படிக்கவும்