தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்மூர்களில் அரசியல் கட்சி சார்பில் ஒட்டப்படும் சில போஸ்டர்கள் சில நேரங்களில் நகைப்பை ஏற்படுத்தி வைரலாக பரவும். சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாததையொட்டி காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையொட்டி அதனை வைத்து திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
23-வது வட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், தலைவர் கலைஞரின் ஆசிபெற்ற அமெரிக்க அதிபர். டொனால்ட் ட்ரம்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகிறோம் என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.