திமுக, அதிமுகவினர் எந்த முகத்துடன் ஓட்டு கேட்கின்றனர் - பிருந்தா காரத் கேள்வி

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (11:55 IST)
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை தட்டிக்கேட்காத அதிமுகவும், திமுகவும் எந்த முகத்தோடு மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
பிருந்தா காரத் தமிழகத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை திண்டுக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
அப்போது பேசிய பிருந்தா காரத், ”உளுந்தம்பருப்பு விலை கிலோவிற்கு ரூ. 206 ஆகவும், துவரம்பருப்பின் விலை ரூ.180 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் இட்லி, சாம்பார் கூட சமைத்து சாப்பிட முடியாத நிலை உள்ளது. இது மோடி அரசின் சாதனை. பெட்ரொல், டீசல் விலை உலக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
 
இதுவரை மோடி ஆட்சியில் 30 தடவைக்கு மேல் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றியுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தாரைவார்த்து வருகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நூறு நாட்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு 47 நாட்கள் கூட வேலை வழங்குவதில்லை என்ற நிலை தான் உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக உள்ள மோடி அரசின் தாக்குதலை மறைப்பதற்காக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு மதமோதலை உருவாக்குகிறது. மக்களை பிளவுபடுத்த மதவெறியை மோடி அரசு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது.
 
இந்த மேடையில் உள்ள தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணியின் தலைவர்கள் தில்லியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஒரே குரலில் தான் பேசுவார்கள். மோடி அரசின் நிலப்பறிப்பு மசோதாவிற்கு எதிராக தில்லியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் வைகோ கலந்து கொண்டார். விவசாயிகளின் நிலத்தை பறிக்கின்ற மோடி அரசுக்கு எதிராக இந்த அணியைச் சேர்ந்த தலைவர்கள் போராடியுள்ளனர். 
 
ஆனால் தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக கட்சிகள் ஏன் வாய்மூடி மௌனமாக உள்ளன? ஜெயலலிதா தன்னை ஒரு தவயோகி என்கிறார். யோகி என்றால் துறவி என்று அர்த்தம். மோடி அரசு மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்போது துறவி போல மௌனமாக இருக்கிறார். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டம் அழிக்கப்படுகிறது. அதைப்பார்த்தும் ஜெயலலிதா மௌனமாக இருக்கிறார்.
 
சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடைபெறும்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் திமுகவினரும் துறவிகள் போல மௌனமாக வாய் மூடியே இருந்தார்கள். திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற சிறுபான்மையின வேட்பாளர் ஒருவரை திமுக நிறுத்தியுள்ளது.
 
ஆனால் இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போது திமுக அதற்கு எதிராக குரல் கொடுக்காத திமுக எந்த முகத்தோடு திண்டுக்கல்லில் வாக்கு கேட்டு வருகிறது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் ஊழல் வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
 
ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்த பிறகு மோடி அரசு தனது விசேஷ தூதரை அனுப்பி வைத்து சந்திக்கச் செய்தார். அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் போது மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை; போராடுவதில்லை.
 
இது இரண்டு கட்சிகளின் சுயநலத்தைத்தான் காட்டுகிறது.திமுக, அதிமுக கட்சிகளின் சுயநலத்தைக் காட்டிலும் தமிழக மக்களின் நலன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
 
எனவே தமிழக மக்கள் நலன் காப்பதற்காக ஒரு மாற்று மேடை தேவைப்படுகிறது. ஒரு மாற்று கொள்கை தேவைப்படுகிறது. அத்தகைய மாற்றுக் கொள்கை உடைய கூட்டணியாகத்தான் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி அமைந்துள்ளது” என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்