ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவிற்கு பின், கட்சியில் தனக்கு உயர் பதவி அளிக்க வேண்டும் என சசிகலாவிடம் திவாகரன் கட்டளையிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் என இரண்டு அணிகள் உருவாகி விட்டன. மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னமும் தினகரனுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டது ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கு ஒரு படி மேலே போய், அதிமுக என்கிற பெயரையே யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
எனவே வழக்கமாக இரட்டை இலைக்கு கிடைக்கும் ஓட்டுகள் இந்த முறை தினகரனுக்கு கிடைக்காது. மேலும், ஏற்கனவே, ஜெ.வின் மரணத்தில் சசிகலா மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் ஓட்டு நிச்சயம் தினகரனுக்கு கிடைக்காது என ஓ.பி.எஸ் தரப்பு நம்புகிறது. இதை, உளவுதுறை அதிகாரிகள் மூலம் உணர்ந்துள்ளார் தினகரன். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது, எந்த இடத்திலும் சசிகலாவின் பெயரை அவர் உச்சரிப்பதில்லை. ஜெ.வின் திட்டங்கள் குறித்து மட்டுமே அவர் பேசி வருகிறார்.
அதுமட்டுமல்ல, இளவரசியின் மகன் விவேக் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோரை கூட கட்சி நடவடிக்கைகளுக்குள் தினகரன் அனுமதிப்பதில்லை. எனவே, தினகரனின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே விவேக் மற்றும் திவாகரன் ஆகியோர் சிறையில் ஏற்கனவே சசிகலாவிடம் முறையிட்டுள்ளனர். இதன் விளைவாக தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அவர்கள் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதன் பின், தினகரன் சார்பில், பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த தஞ்சாவூரை சேர்ந்த ஒரு சினிமா பிரமுகர், தினகரன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி, சசிகலாவின் கோபத்தை தணித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
இதில், சசிகலாவிடம் தினகரன் பற்றி பல புகார்களை கூறி, அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருந்த திவாகரன் தரப்பிற்கு, இந்த விவகாரம் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவை மீண்டும் சந்தித்த திவாகரன், தினகரன் செய்யும் தவறான நிர்வாகத்தால், அதிமுக கட்சி உடைவது உறுதி. இதனால், ஓ.பி.எஸ் அணிகு பலரும் சென்றுவிடுவார்கள். இரட்டை இலை சின்னத்தை கூட அவரால் கைப்பற்ற முடியவில்லை என புகார் கூறினாராம்.
அவரை சாந்தப்படுத்திய சசிகலா, தற்போது அமைதியாக இருங்கள். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடியட்டும். அதில் தினகரன் வெற்றி பெறுவது முக்கிய. அப்போதுதான், மத்திய அரசு நம்மை தேடி வரும். தற்போது நாம் அடித்துக் கொண்டால் அது எதிரிகளுக்கு சாதகாமகப் போய்விடும். எனவே தேர்தல் பணியை கவனியுங்கள்” எனக் கூறினாராம்.
அதற்கு பதிலளித்த திவாகரன், நான் நேரிடையாக ஆர்.கே.நகர் பகுதிக்கு செல்லமாட்டேன். ஆனால், தினகரனை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு. ஆனால், முடி வெளியாகும் நாளில் எனக்கு கட்சியில் உயர் பதவி குறித்து அறிவிப்பு வெளியாக வேண்டும்” என கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.