திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டதாக அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் வேதனை தெரிவித்தார்.
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, நடந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
எத்தனை லட்டு வந்தது என்பது குறித்து அறக்கட்டளைக்கு தான் தெரியும் என்றும் ஆனால், வந்தவை அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.