டெண்டர் விவகாரத்தில் தகராறு: பாஜ மாநில இளைஞரணி செயலாளருக்கு அடி உதை!

வியாழன், 7 டிசம்பர் 2023 (19:14 IST)
தாராபுரம் அருகே திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளரை தாக்கியதாக அதிமுக ஊராட்சி தலைவர், துணை தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கொழுமங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (55). இவர், குண்டடம் ஊராட்சி ஒன்றிய பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மகன் யோகிஸ்வரன் (32) பாஜக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.

இந்தநிலையில் அந்த ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதற்காக டெண்டர் கேட்பு மனுவை ஊராட்சி ஒன்றிய டெண்டர் பெட்டியில் யோகேஸ்வரன் ஏற்கனவே போட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது. அப்போது, யோகேஸ்வரன், அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் குப்புசாமி, அதிமுக துணைத்தலைவர் செந்தில்குமார் அங்கிருந்தனர்.

அங்கு ரத்தினசாமி எழுதி போட்ட டெண்டர் கேட்பு மனு மட்டுமே இருந்ததாக தெரிகிறது. பொது ஏலம் விடும்போது 2-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் யாராவது கேட்டு இருந்தால் மட்டுமே டெண்டர் விடப்படும். இல்லை என்றால் அந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டு மறுமுறை ஏலம் அறிவிக்கப்படும் என்பது ஊராட்சி ஒன்றியத்தின் விதிமுறை.

இந்நிலையில் குப்புசாமி, செந்தில்குமார் ஆகியோரை பார்த்து, ''ஏன் கூடுதலாக யாரும் டெண்டர் போடவில்லை. நாங்கள் டெண்டர் போட்டதால் யாரையும் போட வேண்டாம் எனக் கூறி விட்டீர்களா?'' என யோகேஸ்வரன் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் யோகேஸ்வரனுக்கு கடுமையாக அடி விழுந்துள்ளது.

இதில், கால் மற்றும் கைகளில் காயமடைந்ததாக அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, யோகேஸ்வரன் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யோகேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் ஊராட்சி ஒன்றிய தலைவர் குப்புசாமி, துணைத்தலைவர் செந்தில்குமார்,ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் குப்புச்சாமி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தலை மறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் இருவரையும் டி.எஸ்.பி கலையரசன் உத்தரவின் பேரில்  தனி படை அமைத்து போலீசார்  தேடி வருகின்றனர்.

இதுகுறித்து துணைத் தலைவர் செந்தில் கூறும்போது:-
யோகேஸ்வரன் அடிக்கடி வேண்டுமென்றே புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும் மேலும் அவருக்கு டெண்டர் ஒப்பந்தம் கூறினால் ஒப்பந்த புள்ளிகளார்கள் யாரும் டெண்டர் எடுக்க வருவதில்லை எனவும் குண்டடம் ஊராட்சியில் பல்வேறு பொய்யான பிரச்சனைகளை உருவாக்கி மூலம் அவர் பயனடைந்து வருவதாகவும் வேண்டுமென்றே பலரையும் பிளாக் மெயில் செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் குண்டடம்பகுதியில் இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்