ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து நேற்று பிற்பகல் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பல்வேறு வியூகங்களுடனும், திட்டங்களுடனும் களம் இறங்கியுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜனை தவிர அனைவரும் கலந்துகொண்டனர். சசிகலா அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மையமாக வைத்து களம் இறங்கிய ஓபிஎஸ் அணி ஒவ்வொரு தெருவின் பகுதிக்கும் மூன்று பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் பிரச்சார அணி கூட்டத்தில் தினகரனின் ஆட்கள் இருந்ததை பன்னீர்செல்வத்தின் ஆட்கள் பார்த்துள்ளனர். இதனை உடனடியாக மதுசூதனனின் கவனத்துக்கொண்டு சென்றார்கள் அவர்கள். உடனே மதுசூதனன் ஓபிஎஸ்ஸிடம் இது தொடர்பாக பேசியுள்ளார்.
ஒருவேளை அவர்கள் தினகரன் அணியில் இருந்து நமது அணிக்குக்கூட வந்திருக்கலாம். இதனை பொருட்படுத்த வேண்டாம், பிரசாரத்தை முடித்துவிட்டு இது பற்றி பேசிக்கலாம் என கூறி ஓபிஎஸ் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தினகரன் தரப்பிலிருந்து பன்னீர்செல்வத்தின் பிரசாரத்தை கண்காணிக்கவே ஆட்கள் வந்திருப்பதாகவே பேசிக்கொள்கிறார்கள்.