தினகரன் ஆதரவாளராக உள்ள 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கலைக்க தினகரன் முயல்வதாகவும், ஆனால் எம்எல்ஏக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் தகவல்கள் வருகின்றன.
ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்த பின்னர் தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கி முதல்வர் பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதினர். ஆனால் தங்கள் எம்எல்ஏ பதவியை அவர்கள் ராஜினாமா செய்யவில்லை.
அதன் பின்னர் தனது ஆதரவு எம்எம்ஏக்கள் அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக அவர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார் தினகரன். இதனால் எடப்பாடி தரப்பு இறங்கி வரும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு மீண்டும் தனது ஆதரவாளர்கள் மூலம் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என தினகரன் தரப்பு யூகித்திருந்தது.
ஆனால் எடப்பாடி தரப்பு இறங்கி வராததால் தினகரன் தரப்பு கோபமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது ஆட்சியை கலைக்க வேண்டியது தான் என தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு சசிகலாவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை ராஜினாமா செய்ய சொல்லி ஆட்சியை கலைக்க தினகரன் வற்புறுத்துவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்தால், ஆட்சி போவதுடன் பதவியும் பறிபோகும். பென்ஷன் கூட கிடைக்காது, பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை என்பதால் எம்எல்ஏக்களில் சிலர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாகவும், தொடர்ந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் அணி மாறவும் தயங்க மாட்டோம் எனவும் கூறியதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே சபாநாயகர் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எடப்பாடி தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.