அந்நிய செலவாணி மோசடி வழக்கில், வருகிற 10ம் தேதி டி.டி.வி. தினகரன் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1996ம் ஆண்டு, ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு தேவையான சில முக்கிய பொருட்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். அவர் மீது மொத்தம் 7 வழக்குகள் தொடரப்பட்டது. அதில் 2 வழக்குகளிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது. மற்ற 5 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆஜராகவில்லை. மேலும், தினகரனுக்கு தேர்தல் பணி இருப்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அவரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். எனவே அவருக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும், தேர்தல் முடியும் வரை வழக்கை ஒத்திவைக்க கோரி தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அதை தள்ளுபடி செய்தார்.மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும், அதில் தினகரன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், தினகரன் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர்கள் கூட ஆஜராகவில்லை. அதன்பின் மாலை 5 மணியளவில் தினகரனின் வழக்கறிஞர் ஆஜரானார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி மலர்மதி, தினகரன் தொடர்ந்து ஆஜராகமல் இருப்பதை கண்டித்தார்.
மேலும், வருகிற 10ம் தேதி வழக்கு நடைபெறும் போது தினகரன் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு என அவர் கூறினார். ஒருவேளை அன்றும் தினகரன் ஆஜராக வில்லையெனில் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.