இரட்டை இலைக்கு ரூ.60 கோடி லஞ்சம்: தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (09:56 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்தது இடைத்தரகர் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஆர்கே நகர் தேர்தலின் போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்திடம் மல்லுக்கட்டியது. ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின்கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.
 
இதற்கிடையில் பணப்பட்டுவாடா காரணமாக ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணிகளும் களத்தில் குதித்தன. சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னம் பற்றி விளக்கம் அளிக்க சில நாட்களுக்கு முன்னர் 8 வாரகால அவகாசம் கேட்டது.
 
இந்நிலையில் சசிகலா தரப்பு இரட்டை இலை சின்னத்தை பெற சதீஷ் சந்திரா என்ற இடைத்தரகருக்கு 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது. டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தபோது 1.30 கோடி ரூபாய் ரொக்கம் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு மொத்தமாக 60 கோடி பேரம் பேசப்பட்டு, முன்பணமாக 1.30 கோடி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
 
இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு வாங்கி கொடுக்க தினகரனிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சதீஷ் சந்திரா டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து டிடிவி தினகரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற இருந்த சூழலில். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 60 கோடி பேசப்பட்டு 1.30 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்