பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தாரா தீபா? - குவியும் புகார்கள்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (10:35 IST)
தன்னுடையை பேரவையில் பதவி தருவதாக கூறி ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பலரிடமும் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக புகார்கள் குவிந்து வருகிறது.

 
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தன்னுடைய வீட்டில் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கடந்த டிச.27ம் தேதி போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும், ராமச்சந்திரனை சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா அந்த கல்வீச்சு நாடகத்தை அரங்கேற்றியதும், அதன் பின்னணியில் தீபா இருந்ததும் தெரிய வந்தது. எனவே, போலீசார் தீபாவையும், ராஜாவையும் கடுமையாக எச்சரித்து சென்றனர். 
 
எனவே மக்கள் மத்தியில் அதை மறைக்க, தனது பேரவையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா நீக்கியதாக கூறப்பட்டது. 
 
மேலும், ராமச்சந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீபா பேரவையில் மாவட்ட நிர்வாகி பொறுப்பு வேண்டும் என்பதற்காக ராஜாவிடம் ரூ.1.12 கோடி வரை பணம் கொடுத்ததாகவும், ஆனால், தனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை என்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரைப்போல பலரும் தீபாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். எனவே, அனைவரும் பணத்தை கேட்டு நச்சரிக்கவே, தன்னையும் சேர்த்து, அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தீபா நீக்கியதாகவும் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 
அதோடு, தனக்கு பதவி வேண்டாம். தான் கொடுத்த திருப்பிக் கொடுங்கள். இல்லையெனில், கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என தான் கூறியதால், தீபாவின் வீட்டில் தாக்குதல் நடந்தது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் எனவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
 
தொண்டர்களிடம் தீபா ரூ.20 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்தார் என அவரின் கட்சியில் தென்மண்டலப் பொறுப்பாளராக இருந்த ஜானகிராமன் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
ஆனால், ராமச்சந்திரன் மற்றும் ஜானகிராமன் ஆகியோரை தனக்கு யாரென்றே தெரியாது என தீபா தற்போது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் தீபாவை மற்றொரு ஜெயலலிதாவாகவே நம்பி ஏற்று அவரின் கட்சியில் பதவியை பெற பணம் கொடுத்து பின் பதவியும் பெறாமல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கி எறியப்பட்ட பலர் தீபாவின் நடவடிக்கையில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்