கணவரின் முடிவால் தீபா பேரவை கலைப்பு

சனி, 18 மார்ச் 2017 (15:54 IST)
தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கியதால் தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓபிஎஸ் அணியில் இணைய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் களமிறங்கினார். எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற தனி அமைப்பையும் தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடைப்பெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.
 
இந்நிலையில் நேற்று தீபாவின் கணவர் திடீரென்று புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்தார். இதையடுத்து தீபா பேரவையில் செயல்பட்டு வந்த திருச்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளார்.
 
இதுதொடர்பாக நாளை ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார். அந்த கடிதத்தில்,
 
தீபா தனக்கு முதலில் மக்கள் திரண்டு எழுந்து அளித்த ஆதரவை உரிய முறையில் ஏற்காமலும் அலட்சியப்படுத்தியும், காலம் கடத்தியதால் மக்கள் எழுச்சி மெல்ல மெல்ல குறைந்து விட்டது. தொண்டர்களை அவர் குழப்பி வருகிறார். இந்த நிலையில் தினமும் ஏராளமானோர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். 
 
தீபா பேரவையில் ஈடுபட்ட தோழர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தீபாவுடன் இணைந்து செயல்பட முடியாமல் அவரது கணவன் மாதவன் விலகி நிற்பது தீபா ஆதரவாளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்