தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'மோன்தா' புயலாக வலுப்பெற்றது. நேற்று காலை மேலும் தீவிரமடைந்த மோன்தா, வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திரக் கடலோர பகுதியான மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவிற்கு அருகாமையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
புயலின் தாக்கத்தால், கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல தமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாத மழையால் ரயில், விமானப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், எதிர்பார்த்தபடி 'மோன்தா' புயலானது, நேற்று நள்ளிரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, நர்சாபூருக்கு அருகே தீவிர புயலாக கரையை முழுமையாகக் கடந்தது.
புயல் கரையைத் தாண்டியதன் விளைவாக, தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை குறைந்து, இன்று காலை வெயில் அடித்தது. இதனால் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.