மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்களை பொதுவுடைமையாக ஆக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில், கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ’தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்தார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன.
அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.
ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனிநபர் சொத்துக்கள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.