குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து, அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவத்துறையின் சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான், அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து, அதனை தன் யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.
இந்நிலையில், இன்று யூடியூபர் இர்பான் சென்னை, டிஎம்எஸ் வளாகத்திற்கு நேரில் சென்று தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும், தனது யூடியூப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து, விளக்கி மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.