ஜோதிமணி விவகாரம்: தொலைக்காட்சி நெறியாளருக்கும் கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி

புதன், 20 மே 2020 (07:01 IST)
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்பி ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு கரு.நாகராஜனுக்கு மட்டுமின்றி தொலைக்காட்சி நெறியாளருக்கும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணியைச்‌ சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌, மனித நேய மக்கள்‌ கட்சி, கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர்‌ கழகம்‌, திராவிட இயக்க தமிழர்‌ பேரவை ஆகிய கட்சிகளின்‌ ஒப்புதலுடன்‌ விடுக்கப்படும்‌ கூட்டறிக்கை:
 
நியூஸ்‌ 7 தமிழ்‌ தொலைக்காட்சி விவாதத்தில்‌ பங்கேற்ற மக்களவை காங்கிரஸ்‌ உறுப்பினர்‌ செல்வி எஸ்‌.ஜோதிமணி அவர்களை இழிவுபடுத்துகிற வகையில்‌ பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன்‌ பேசியதை அநாகரீகத்தின்‌ உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின்‌ சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்‌. நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில்‌ பா.ஜ.க.வினர்‌ மிக
மிக கேவலமான முறையில்‌ விவாதத்தில்‌ பங்கேற்று வருவதை எவராலும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இத்தகைய போக்கின்‌ தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில்‌ செல்வி ஜோதிமணி அவர்களை தரக்குறைவாக கரு.நாகராஜன்‌ பேசுவதற்கு நெறியாளர்‌ அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது. அந்த விவாதத்தை பார்த்தவர்கள்‌ அனைவருமே பெரும்பாலான நேரம்‌ கரு.நாகராஜனுக்கு ஏன்‌ வழங்கப்பட்டது என்கிற எண்ணம்‌ தான்‌ மேலோங்கி நிற்கிறது. வரம்புமீறி நாகரிகமற்ற முறையில்‌ பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில்‌ இருந்து நெறியாளர்‌ முற்றிலும்‌ தவறிவிட்டார்‌ என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்‌.
 
தொலைக்காட்சி விவாதத்தில்‌ மக்களவை உறுப்பினர்‌ என்றோ, பெண்‌ என்றோ பாராமல்‌ செல்வி எஸ்‌.ஜோதிமணி அவர்களை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில்‌ நியூஸ்‌ 7 தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்‌. எனவே பா.ஜ.க.வினர்‌ பங்கேற்கும்‌ நியூஸ்‌ 7 தொலைக்காட்சி விவாதங்களில்‌ மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணி
கட்சியைச்‌ சேர்ந்தவர்கள்‌ எவரும்‌ பங்கேற்க மாட்டார்கள்‌ எனபதை
தெரிவித்துக்கொள்கிறோம்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்