நிர்மலா சீதாராமன் குரலை வைத்து மோசடி.. ரூ.33 லட்சம் ஏமாந்த காங்கிரஸ் பிரமுகர்..!

Mahendran

வியாழன், 1 மே 2025 (10:13 IST)
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டிற்கு தொடர்புடைய மோசடி மூலம் ரூ.33 லட்சத்தை இழந்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களுக்கு முன், அந்த நபரின் வாட்ஸ்-அப்-க்கு ஒரு 'லிங்க்' வந்தது. அந்த 'லிங்க்'வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர் ரிலையன்ஸ் அம்பானி போன்ற பிரபலங்கள் ஆன்லைன் முதலீடுகளை பற்றி பேசும் வீடியோ காட்சி இருந்தது. அந்த வீடியோவைப் பார்த்த அவர், அதில் உள்ள தகவல்களை நம்பி, தனது ஈ-மெயில் ஐடியை பகிர்ந்தார்.
 
சிறிது நேரத்திலேயே, அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் , “இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பில் முதலீடு செய்ய வேண்டும்” என கூறினர். அதன் அடிப்படையில், பல தவணைகளாக ரூ.33 லட்சம் முதலீடு செய்தார்.
 
ஆனால்,  இரட்டிப்பு லாபத்தைப் பற்றிய கேள்வி எழுப்பியபோது, மழுப்பலான பதில்கள் வந்தன. முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர் சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
 
இதுகுறித்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் கூறும்போது, "இந்த மோசடியில் குவாண்டம் ஏ.ஐ. மோசடி என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மோசடி கும்பல் இந்த நபரின் விவரங்களை பெற்றுக் கொண்டு, ரூ.33,10,472 தொகையை வங்கி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது."
 
விசாரணையில், இந்த மோசடியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஆன்லைன் நிதி மோசடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பேராசையால் பலர் நட்டம் அடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்