சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல்: நடவடிக்கையை தொடங்கியது தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (10:24 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கான தண்டனையில் இருந்து விடுப்பு அளித்தனர்.


 
 
இந்த வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலாவின் 128 சொத்துக்களில் 68 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்த மான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட உள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கைப்பற்ற ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்