வேளாண் கல்லூரி மாணவர்கள் ஈஷா விவசாய பண்ணைக்கு வருகை!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (17:02 IST)
நேற்று கோவையில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்களும், தொடர்ந்து இந்த வாரம் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணைக்கு வந்து இயற்கை விவசாய முறைகளை கற்கின்றனர்.
 

கோவை ஈஷா யோக மையத்தின் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியான 'மண் காப்போம்' இயக்கத்தின் ஈஷா இயற்கை விவசாயப்பண்ணை செம்மேட்டில் உள்ளது. 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப்பண்ணையில் இயற்கையான முறையில் பலவிதமான பயிர்களை சாகுபடி செய்து, 'ஒருங்கிணைந்த மாதிரி பண்ணை'யாக உருவாக்கியுள்ளனர். இங்கு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள்
இயற்கை முறையிலான விவசாயம் செய்வது குறித்து தெரிந்து கொள்ள வருகிறார்கள். நேரடி களப்பயிற்சி, வெற்றி பெற்ற விவசாயிகள் மற்றும் நிபுணர்களின் நேரடி பயிற்சி, பூச்சி மேலாண்மை, இடுபொருள் பயிற்சி என விவசாயத்தின் சவால்கள் அனைத்திற்கும் தீர்வளிக்கும் விதமான பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை அமிர்தா வேளாண் கல்லூரியின் மாணவ மாணவியர் ஈஷா இயற்கை விவசாய பண்ணைக்கு வருகை தந்தனர். மண் காப்போம் இயக்கத்தின் மூலம் நடக்கும் இயற்கை விவசாயத்தின் நுட்பங்களையும், அவற்றை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வழிகளையும் கேட்டறிந்தனர். 50 ஆண்டுகளாக ரசாயனங்கள் மூலம் பாழ்படுத்திய நமது நிலங்களை இயற்கை வேளாண் முறைக்கு பக்குவபடுத்துவது குறித்தும், ஒவ்வொரு பயிர்களுடன் இணைப்பயிர், ஊடுபயிர் தேர்வு முறைகளும், உழவில்லா வேளாண்மை முறையின் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.


 
மேலும் பயிர்வாரியான வளர்ப்பு நுணுக்கங்களும், களை மேலாண்மை, பூச்சி மேலாண்மை, இயற்கை முறையிலான இடுபொருள் தயாரிப்பு மற்றும் உபயோகித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தாங்கள் வருடக்கணக்கில் கற்றுக்கொள்வதை இதுபோன்ற பண்ணைகளில் செயல்முறையில் பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்வது தங்களை மேலும் மேலும் மெருகேற்றிக்கொள்ள உறுதுணையாக இருப்பதாக மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். இதைப்போலவே வெவ்வேறு துறையில் பணிபுரிபவர்களும் குழுக்களாக ஈஷா இயற்கை விவசாய பண்ணைக்கு வருகை தந்து மேற்கூறிய விவசாய முறைகளை ஆர்வத்தோடு அறிந்துகொள்கின்றனர்.

இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை நடத்தி வரும் நாங்கள் கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம். அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள இந்தப்பண்ணையில் பலவிதமான காய்கறிகள் மட்டுமின்றி பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா அரிசி வகைகளும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். இதில் வெற்றி பெறும் முறைகளையே விவசாயிகளிடமும் பகிர்ந்துகொள்கிறோம்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்