முதல்வராக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமடைந்த பின்னரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலமை மர்மமாகவே இருக்கிறது. அவர் முதல்வராக இருப்பதை சசிகலா விரும்பவில்லை எனவும், மத்திய அரசின் அழுத்தத்தின் பேரிலே அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் எனவும் தினமும் பல்வேறு செய்திகள் வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீடு மற்றும் அவரது தலைமைச் செயலக அறை, அவரது மகன் வீடு போன்றவற்றில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை.
முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று வந்த மறுநாளே இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் போயஸ் கார்டனில் இருந்து முதல்வருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதனையடுத்து நள்ளிரவு போலீஸ் பாதுகாப்பு ஏதும் இல்லாமல் கிளம்பி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாலை வரை சசிகலாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு அதிகாலை தான் வீடு திரும்பினார் என கூறப்படுகிறது.