தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு நடத்த விடமாட்டோம் என விலங்குகள் நல ஆர்வலர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்ப்படுத்துவோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதனையடுத்து இன்று திமுக சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக இதற்கு இன்னமும் அனுமதி அளிக்காவிட்டாலும் எதிர் கருத்துக்களை கூறி வந்தாலும் மாநில பாஜக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடத்த நம்பிக்கையோடு இருந்தோம் ஆனால் இன்னும் அதற்கான சாதகமான பதில் வந்து சேரவில்லை என கூறியுள்ளார்.