தமிழகத்தின் கடை கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ஆம் தேதி ஓகி புயல் தாக்கியது. இந்த புயலால் பல உயிர்களை கடலில் பரிகொடுத்த அந்த மாவட்ட மக்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற பதில் தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
பக்கத்து மாநிலமான கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறும் வேளையில் அந்த மாநில முதல்வர் பினராய் விஜயன் இந்த விவகாரத்தை அருமையாக கையாண்டு வருகிறார். ஆனால் குமரி மாவட்டத்தை பார்வையிட மற்ற கட்சிகள் வந்தாலும், முதல்வரோ, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களோ பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரவில்லை.
குமரி மாவட்ட மக்கள் தினமும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் உடன்பிறப்புகளை இழந்துவிட்டு, அவர்களின் பிரேதங்கள் கூட கிடைக்காமல் தினமும் கண்ணீரில் மூழ்கின்றனர் இறந்தவர்களின் வீடுகளில் உள்ளவர்கள். நிவாரண பணிகளும் இதுவரை சொல்லும்படியாக இல்லை. ஆனால் பேட்டிகளில் மட்டும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன என ஆளும் தரப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில் கள நிலவரம் இதுவல்ல. மக்கள் ஆளும் தரப்பு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
தனது மாநிலத்தை சேர்ந்த மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு, உறவுகளை இழந்து அனாதைகளை போல நிற்கும் போது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது அந்த மாநில முதல்வரின் தலையாய கடமை. ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை ஈட்டுத்தருகிறது மீன்வளத்துறை. ஆனால் அந்த மக்கள் கண்ணீரில் மூழ்குவதை அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
மீனவ மக்களின் பாதிப்பை பொருட்படுத்தாது ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக மதுசூதனனை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து இன்று திடீரென முதல்வர் குமரி மாவட்டத்துக்கு ஆய்வு செய்ய பயணம் செல்கிறார். இவர் தான் மக்களின் முதல்வர், பாருங்கள் மக்களே.