ஊர்ப்பெயர் மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டது: என்ன காரணம்?

வெள்ளி, 19 ஜூன் 2020 (07:34 IST)
கடந்த வாரம் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது தெரிந்ததே. இந்த ஊர்ப்பெயர் மாற்றத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி நெட்டிசன்கள் ஊர்ப்பெயர் மாற்றத்தை கேலியும் கிண்டலுமான மீம்ஸ்கள் பதிவு செய்து வைரலாக்கினர்.
 
இந்த நிலையில் தமிழகத்தின் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘தமிழ் ஊர்ப் பெயர்களின் உச்சரிப்புக்கு இணங்க ஆங்கிலப் பெயர்களை மாற்றி அமைக்க ஜூன் 2018இல் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 32 குழுக்களையும், மாநில அளவில் 10 நிபுணர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது. இந்தக்குழுக்களின் பரிந்துரையின் பேரில் 13/3/20 அன்று இதைச்செயல்படுத்தும் அதிகாரம் படைத்த வருவாய்/உள்ளாட்சித்துறைகளுக்கு அனுப்பப்பட்டது. இதன்வடிவம் அரசு அலுவலகங்கள் இயங்கத்துவங்கிய பின் 9/6/20 அன்று இணையத்தில் ஏற்றப்பட்டது. கடந்த 1 வாரத்தில் இம்முயற்சிக்கு (VIT விசுவநாதன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட) பல ஆதரவுக்குரல்களும், பல எதிர்ப்புக் குரல்களும் எழுந்த நிலையில், “புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து 5 முறை முயன்று இயலாமல் போன இப்பணி வெற்றி அடைய வேண்டுமென்றால், முதலில் அறிஞர் குழு அங்கீகாரம் பெற்ற மொழிமாற்ற விதிமுறை (transliteration protocol) ஆவணப்படுத்தி விட்டு, அதன் அடிப்படையில் குறைந்த அளவில் ஆங்கிலப்பெயர் மாற்றம் செய்தல் நலம்” என்ற பொதுக்கருத்தின் படி மாண்புமிகு முதல்வரின் ஆசியுடன், எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் தமிழ் என்று இலங்க விரைவில் இந்த அரசாணை மாற்றங்களுடன் வெளியிடப்படும் ! தமிழ் உணர்வாளர்களின் புரிதலையும், அரசியல் கடந்த ஆதரவையும் வேண்டுகிறேன்
 
இவ்வாறு அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்