தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றம்?: வரிந்து கட்டி களத்தில் இறங்கும் முதல்வர்?

சனி, 3 ஜூன் 2017 (15:06 IST)
தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே இணக்கமில்லாத சூழல் நிலவுவதாக தலைமை செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் கிரிஜா வைத்தியநாதனை தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன.


 
 
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது தலைமை செயலக அலுவலகம் உள்ளிட்டவைகளில் துணை ராணுவப்படையின் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டதை அடுத்து அவர் ஓரம் கட்டப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
 
கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்தில் பாஜகவின் ஆலோசனை இருந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கும் கிரிஜா வைத்தியநாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக இணக்கமான சூழல் இல்லையென பேசப்படுகிறது.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அலட்சியப்படுத்தி வருகிறாராம். இதனால் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து கிரிஜா வைத்தியநாதனை மாற்ற நடவடிக்கை எடுப்பாராம். அவருக்கு பதிலாக தற்போது உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்ட்டியை நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்