ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிலையில், இந்த கருத்தை ஆதரிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அந்த திருமணங்களை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பின் பேசிய அவர், "திருமணம் முடிப்பவர்கள் 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் இல்லை, 16 செல்வங்கள்," என்று கூறினார்.
ஆனால் அதே நேரத்தில், "அளவோடு பெற்று, வளமோடு வாழ்ந்தால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும். ஏன் நாம் அளவோடு பெற்று, வளமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாமே என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், மக்கள் தொகை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய போது, தென்னிந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தை கிட்டத்தட்ட ஆதரிப்பது போல், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.