நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

திங்கள், 5 ஜூன் 2023 (21:30 IST)
பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம், எளம்பலூர் கிராமம், திருச்சி-சென்னைதேசிய நெடுஞ்சாலையில் இன்று (05.06.2023) அதிகாலை திண்டுக்கல் சென்றுகொண்டிருந்த வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தும்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையின் இடதுபுறம் விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி காயம் ஏற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், 108 ஆம்புலன்ஸ் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த இரு நபர்களான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.குப்புசாமி த/பெ.அழகர்சாமி (வயது 60), பெரம்பலூர் வட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜேந்திரன் (108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்) த/பெ.இன்னாசிமுத்து (வயது 45) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.கவிப்பிரியா த/பெ.சுப்ரமணி (வயது 22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி.நீலாக/பெ.கோபால் (வயது 65), இராமநாதபுரம், பொந்தமல்லி  கிராமத்தைச் சேர்ந்த திரு.கிழவன் த/பெ.குருசாமி (வயது 45), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கணேசன் த/பெ.குப்புசாமி (வயது 42), இராமநாதபுரம், பொந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த திரு.சேகர் த/பெ.கருப்பையா (வயது 40) மற்றும் இராமநாதபுரம், பொந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த திரு.சாமிதாஸ் த/பெ.தேவதாஸ் (வயது 40) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்